கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை - வீராணம், பெருமாள், வாலாஜா ஏரிகளில் உபரி தண்ணீர் வெளியேற்றம் :

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் வீராணம், பெருமாள் ஏரிகள் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கையாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ள வீராணம் ஏரியின் நீர் மட்டம் 47.50 அடி ஆகும். மழை காரணமாக கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரிக்கு விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பை கருதி விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 61 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது ஏரியில் 45.15 அடி தண்ணீர் உள்ளது.

இது போல 4 அடி தண்ணீர் தேக்கக்கூடிய சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் உள்ள அணைக்கட்டில் 7 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அணைக்கட்டிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது போல 5 அடி தண்ணீர் தேக்கக்கூடிய வாலாஜா ஏரியில் தற்போது 5 அடிக்கு தண்ணீர் இருப்பதால் ஏரியில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 300 கன அடி பரவனாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இது போல பெருமாள் ஏரியில் விநாடிக்கு 2 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

5.90 அடி கொண்ட பெருமாள் ஏரியில் 6.50 அடி தண்ணீர் இருப்பதால் விநாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி வடிகால் மதகு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE