பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு வீரர்கள் தயார் : ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் தகவல்

பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் 150 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், 150 தேர்ந்த வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

6 ரப்பர் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர கயிறுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நவீன இயந்திரங்கள் என அனைத்து வகையான கருவிகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சத்தியமங்கலம், பவானி, அத்தாணி, கொடுமுடி, ஊஞ்சலூர், மொடக்குறிச்சி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதியில் மட்டுமே அதிக அளவு பாதிப்பு இருக்கும். வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்தாலும் அதை நாம் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்கிறோம், என்றார்.

இதனிடையே மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மீட்பு பணிக்காக, ஈரோடு மாவட்டத்தில் இருந்து 5 தீயணைப்பு வீரர்கள் சென்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE