மழையால் ஈரோட்டில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - கொடிவேரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை : அந்தியூர் அருகே மண்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு

By செய்திப்பிரிவு

பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கொடிவேரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம் 2.50 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழையால், அணைக்கான நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, பவானி ஆற்றில் தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 5292 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 1500 கனஅடியும், பவானி ஆற்றில் 8500 கனஅடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீர் கொடிவேரி வழியாகச் சென்று பவானி கூடுதுறையில் காவிரியில் கலந்து வருகிறது. பவானிசாகர் அணையில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால், கொடிவேரி தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால், அங்கு மீன் பிடிக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் குளிக்க, துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பர்கூர் சாலையில் மண்சரிவு

அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக கர்நாடகா செல்லும் மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே நெய்கரை மற்றும் கெட்டிமேடு ஆகிய 2 இடங்களில் நேற்று மதியம் மண்சரிவு ஏற்பட்டது. பெரிய பாறைகள் சாலையில் விழுந்ததால், வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

பர்கூர் பகுதியில் உள்ள 33 கிராம மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பர்கூர் பகுதியில் செயல்படும் 15 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுள்ளது. பாறைகள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி நடந்து வருவதாகவும், இன்று பிற்பகலில் போக்குவரத்து சீராகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை தொடர்ந்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்