நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - வரைவு வாக்குச்சாவடி மீது ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு :

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் மீதான ஆட்சேபனைகளை அரசியல் கட்சியினர் தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் கடந்த 6-ம் தேதி வெளியிடப்பட்டது.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எம்பி, எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார்.

சேலம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் சேலம் மாநகராட்சியில் 720 வாக்குச்சாவடிகள், ஆத்தூர் நகராட்சியில் 63 , மேட்டூர் நகராட்சியில் 55 வாக்குச் சாவடிகள்,எடப்பாடி நகராட்சியில் 59 வாக்குச் சாவடிகள், நரசிங்கபுரம் நகராட்சியில் 27 வாக்குச் சாவடிகள், 31 பேரூராட்சிகளில் மொத்தம் 537 வாக்குச் சாவடிகள் என மாவட்டத்தில் 1,461 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகிறது.

இதுதொடர்பான வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. இதில், ஏதேனும் ஆட்சேபனை இருக்குமாயின் அது குறித்து எழுத்துப்பூர்வமாக தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களான சேலம் மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோரிடம் இன்று (9-ம் தேதி) தெரிவிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE