நாகை மாவட்டத்தில் இதுவரை 39 சதவீத வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது என அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை வகித்து பேசியதாவது:
நாகை மாவட்டத்தில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழையில் இதுவரை 39 சதவீதம் பெய்துள்ளது. மழை மற்றும் வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து தங்க வைப்பதற்காக 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 5 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்கள், 144 சமுதாய கூடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை தயார்நிலையில் உள்ளன. இந்த பாதுகாப்பு மையங்களில் மருத்துவம், குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற வசதிகளை செய்துவைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி மற்றும் வெண்ணாறு கோட்டங்களில் பொதுப்பணித் துறை சார்பில் 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆற்றின் கரையோரப் பகுதிகளை அடிக்கடி கண்காணிக்க அதற்குரிய அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, எஸ்.பி கு.ஜவஹர், மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago