நாகையில் நவ.16-ல் நடைபெறவிருந்த - உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு :

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியை மையமாகக் கொண்டு பெட்ரோகெமிக்கல் மண்டலமாக அரசு அறிவித்துள்ளதைக் கண்டித்து, நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு நவ.16-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்திருந்தார். இதையடுத்து, போராட்டக்குழுவினரை நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து ஆட்சியர் அருண் தம்புராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் பங்கேற்ற பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறது.

இதைக் கண்டித்து நாகை ஆட்சியர் அலுவலகம் முன் நவ.16-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, எங்களை ஆட்சியர் அழைத்துப் பேசினார். அப்போது, பெட்ரோகெமிக்கல் மண்டலம் என்ற அறிவிப்பாணையை திரும்பப் பெறுவது குறித்து விரைவில் முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார். விவசாயிகள் ஒப்புதலின்றி நிலம் கையகப்படுத்தப்படாது என ஆட்சியர் உத்தரவாதம் அளித்தார். மேலும், மழை, புயல் சீற்றங்களை கருத்தில் கொண்டு போராட்டத்தை திரும்பப் பெற கேட்டுக்கொண்டார். இதை ஏற்று, உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE