தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. மாலை 5 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால், தூத்துக்குடி நகரில்சாலையோரங்களில் தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். பல இடங்களில் வயல்களில் தண்ணீர் நிரம்பியது. வாழைகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் திருச்செந்தூர் 1, காயல்பட்டினம் 1, விளாத்திகுளம் 2, வைப்பாறு 8, சூரங்குடி 6, கீழஅரசடி 1, எட்டயபுரம் 1.2, சாத்தான்குளம் 1, தூத்துக்குடியில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மீனவர்கள் நாளை (நவ.10) வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் நேற்றும் கடலுக்கு செல்லவில்லை.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், ஏற்கெனவே தங்கு கடல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்றைக்குள் (நவ.9) கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago