திருப்பத்தூர் மாவட்டத்தில் - மழைநீரை அகற்றி சாலைகளை சீரமைக்க வேண்டும் : ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைப்போல் தேங்கியுள்ளது. இதை உடனடியாக அகற்றி சாலைகளை சீரமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகங்களுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று உத்தரவிட்டார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்தது. குறிப்பாக, ஆம்பூர், வடபுதுப்பட்டு, திருப்பத்தூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்தது.

தொடர் மழையால் தாழ்வானப்பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட புதுப் பேட்டை, ரயில்வே மேம்பாலம், நேதாஜி நகர், சிவராஜ்பேட்டை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு, அண்ணா நகர், டிஎம்சி காலனி, கவுதம் பேட்டை, இரட்டை மலை சீனி வாசன் பேட்டை, கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி யுள்ளது.

மேலும், பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு அவை சரியாக மூடப்படாத தால் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் குட்டைப் போல் தேங்கியுள்ளது.

அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்லும் நிலை நகராட்சிப்பகுதிகளில் நிலவி வருகிறது. புதுப்பேட்டை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே மழை நீர் தேங்கியுள்ளது.

இந்த தகவல் சமூக வலை தளங்களில் நேற்று காலை வைரலாக பரவியது. இதைக்கண்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா புதுப்பேட்டை ரயில்வே மேம்பாலம் பகுதிக்கு சென்று அங்கு தேங்கியிருந்த மழைநீரை உடனடியாக வெளியேற்ற நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

புதுப்பேட்டை சாலையில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை உடனடியாக சரி செய்து மழைநீர் கால்வாய் வழியாக செல்ல தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

அப்போது, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் லோகநாதன், திருப் பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், நகராட்சி பொறியாளர் உமாமகேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனர்.

மழையளவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் : ஆலங்காயம் 78.6 மி.மீ., ஆம்பூர் 59.4 மி.மீ., வடபுதுப்பட்டு 55.4 மி.மீ., நாட்றாம்பள்ளி 29.4 மி.மீ., கேத்தாண்டப்பட்டி 26 மி.மீ., வாணியம்பாடி 36 மி.மீ., திருப்பத்தூர் 20.2 மி.மீ.,என மொத்தம் 305 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE