புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கான - மறுகுடியமர்வு, மறுவாழ்வு வரைவுக் கொள்கை : மக்கள் கருத்துகளை தெரிவிக்க நவ.18-வரை காலஅவகாசம்

ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கான மறுகுடியமர்வு, மறுவாழ்வு வரைவுக் கொள்கை குறித்த கருத்துகளை தெரிவிக்க வரும் நவ.18-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாரியத்தின் சார்பில் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக் கொள்கை வரைவு இணையதளத்தில் கடந்த அக்.12-ம் தேதி வெளியிடப்பட்டது.

வரைவுக் கொள்கை குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் இருந்து பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் வரவேற்கப்பட்டன. அக். 27-ம் தேதி வரை ஆன்லைன் உள்ளீட்டு படிவ இணைப்பில் கருத்துகளைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பரிந்துரைகளைத் தெரிவிக்க 7 நாட்கள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பரிந்துரைகள் மற்றும் கருத்துகளைத் தெரிவிக்க காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை ஏற்று கூடுதலாக 15 நாட்கள், அதாவது நவ. 18-ம் தேதி வரை தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ‘http://www.tnscb.org/wp-content/uploads/2021/10/Draft-RR-Policy - tamil.pdf ’ என்ற ஆன்லைன் படிவத்தில் சமர்ப்பிக்கலாம். அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கோட்ட அலுவலகங்களில் கிடைக்கும் வரைவுக் கொள்கை நகலைப் பெற்று, தங்கள் கருத்துகளை ‘தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர், எண்.5, காமராஜர் சாலை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை -5’ என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE