ஆம்னி பேருந்துகளில் 40% கட்டணம் உயர்வு : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் அவதி

ஆம்னி பேருந்துகளில் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. இதனால், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் அவதிப்பட்டனர்.

தொடர் விடுமுறை, பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

எனவே, அரசு பேருந்துகளுக்கு இருப்பது போல், ஆம்னி பேருந்துகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுதொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது, பொதுமக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, தீபாவளியையொட்டி பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் சுமார் 40 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஆம்னி பேருந்துகளில் ரூ.1,400 எனவும், ஏசி பேருந்துகளில் ரூ.1,700, கோயம்புத்தூருக்கு ரூ.1,000, ரூ.1,300 (ஏ.சி), மதுரைக்கு ரூ.1,400, ரூ.1,600 (ஏ.சி) என கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘பண்டிகைகள் போன்ற முக்கிய நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல கூட்டம் அதிகரித்தால், ஆம்னி பேருந்துகளில் உடனே கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். நீண்ட தூரம் செல்வோருக்கு வசதியாக இருப்பதால், வேறுவழியின்றி ஆம்னி பேருந்துகளில் பயணிக்க வேண்டியுள்ளது. தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர்.

தனியார் இணையதளங்களில் வெளிப்படையாகவே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். தற்போது ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE