துறைமுகத்தின் வங்கிக் கணக்கில் மோசடி - இந்தியன் வங்கி அதிகாரிகள் உட்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை : சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை துறைமுகத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.45 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் இந்தியன் வங்கி அதிகாரிகள் உட்பட 18 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் ரூ.100 கோடி, கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், துறைமுக பொறுப்புக் கழகத்தின் அதிகாரி எனக்கூறி வங்கிக் கிளைக்கு வந்த நபர், அந்த பணத்தை வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றி, ரூ.50 கோடியை வைப்புக் கணக்கில் வைக்கவும், ரூ.50 கோடியை நடப்பு கணக்கில் வைக்கவும் கூறி, அதற்கான ஆவணங்களைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஆவணங்களைச் சரிபார்த்த வங்கி அதிகாரிகள், அவர் சொன்ன கணக்குக்கு ரூ.100 கோடியை மாற்றியுள்ளனர்.

அடுத்த சில நாட்களில் அந்த கணக்கில் இருந்த ரூ.45 கோடி எடுக்கப்பட்டு வெவ்வேறு வங்கிகளில் உள்ள பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், துறைமுக பொறுப்பு கழக அதிகாரி என வங்கிக்கு வந்தவரும், அவர் கொடுத்த ஆவணங்களும் போலி என தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக சென்னை துறைமுகம் சார்பில் சிபிஐயில் புகார் கொடுக்கப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறைமுக அதிகாரி போல் நடித்த கணேஷ் நடராஜன், தரகர் மணிமொழி, வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தடுத்து நடந்த விசாரணையில், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இருவர் உட்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 18 பேர் மீதும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், 18 பேர் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE