தீபாவளியை முன்னிட்டு சேலம், திருச்சி வழியாக செல்லும் சிறப்பு பேருந்துகள் கொடிசியாவில் இருந்து நேற்று முதல் இயக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் கொடிசியா வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, அரசுப் போக்குவரத்துக்கழக கோவை கோட்டத்தின் சார்பில் நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
கொடிசியாவிலிருந்து வரும் 4-ம் தேதி வரை சேலம் மற்றும் திருச்சியை கடந்து செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, கோவை-சேலம், கோவை-திருச்சி வழித்தடத்தில் தலா 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்காலிக பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் மழையில் நனையாதவாறு நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரவு முழுவதும் எரியும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சேற்றில் பேருந்துகள் சிக்கினால் அவற்றை மீட்க, மீட்பு வாகனம், பழுதுநீக்கும் வாகனம் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு எந்த பேருந்து, எந்த வழித்தடத்தில் செல்லும் என்பதை தெரிவிக்க ஒரு ரேக்குக்கு 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கொடிசியா திடலுக்கு போதுமான அளவில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரையை கடந்தும், தேனியைக் கடந்தும் செல்லும் சிறப்பு பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. அதன்படி, கோவை-மதுரை வழித்தடத்தில் 100 பேருந்துகள், கோவை-தேனி வழித்தடத்தில் 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோவை காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு, திருப்பூர் (வழி) அவிநாசி, திருப்பூர் (வழி) பல்லடம், கரூர், சத்தி மார்க்கம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மார்க்கம் செல்லும் தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டத்தை பொருத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும், பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago