அக்டோபர் மாதத்தின் நூல் விலையே : நடப்பு மாதத்திலும் தொடர வேண்டும் : நூற்பாலைகளுக்கு ஏஇபிசி கடிதம்

அக்டோபர் மாதத்தின் நூல் விலையே, நவம்பர் மாதத்திலும் தொடரவேண்டும் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (ஏஇபிசி) தலைவர் ஏ. சக்திவேல், அனைத்து நூற்பாலைகளுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: நூல் விலையில் உள்ள நிலையற்ற தன்மை, தற்போதைய ஆர்டர்களை முடிக்கவும், எதிர்கால ஆர்டர்களை முன்பதிவு செய்யவும் தடையாக உள்ளது. பிரதமர் மோடி ஊக்குவித்த 400 பில்லியன் டாலர் வர்த்தகம் என்ற இலக்கை எதிர்கொண்டு, முன்னேறிவரும் இச்சூழ்நிலையில், இந்த நூல் விலையேற்றம் எடுக்கப்பட்ட ஆர்டர்களை முடிக்க இயலுமா என்ற கேள்விக்குறியையும் எழுப்புகிறது. இந்நிலை நீடித்தால், ஆயத்த ஆடைத் துறையில் எதிர்பார்க்கும் வளர்ச்சி ஏற்படாது. அக்டோபர் மாதத்தின் அதே நூல் விலையே இந்த நவம்பர் மாதத்திலும் தொடரவேண்டும். கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூற்பாலைகளுக்கும் ஆயத்த ஆடைத்தொழில் உறுதுணையாக இருந்ததை அனைவரும் அறிவர். ஆடை ஏற்றுமதி தொழிலை மீண்டும் வளர்த்தெடுக்கவும், தொடர்ந்து இரு தொழில்களுக்கும் வெற்றிகரமான சூழ்நிலையை உருவாக்கும் விதமாகவும், நூல் விலை ஏற்றத்தை தவிர்த்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம்

திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் மற்றும் பொதுச்செயலாளர் முருகசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நூற்பாலைகள் தற்போது நூல் விலையை கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தி உள்ளன. நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஜவுளித்துறை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. ஏற்கெனவே, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் தத்தளித்து வருகின்ற சிறு, குறு நிறுவனங்கள் தற்போது விழிபிதுங்கி நிற்கின்றன. இந்த நேரத்தில் மீண்டும் நூல் விலை உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது. இதனால் ஜவுளித்துறை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களான டையிங், பிரிண்டிங், நிட்டிங், காம்பேக்டிங், எம்ப்ராய்டரி, ரைசிங் என அனைத்து துறையினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE