தீபாவளிக்கு பின்பு பருத்தி, நூல் விலையில் நிலையான தன்மை நிலவும் : தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நம்பிக்கை

தீபாவளிக்கு பின்பு பருத்தி, நூல் விலையில் நிலையான தன்மை நிலவும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து சர்வதேச அளவில் பருத்தி விலை அபரிமிதமாக அதிகரித்து வருவதால், பருத்தியை நம்பியிருக்கும் ஜவுளித்தொழில் சவால்களை சந்தித்து வருகிறது. பருத்தி சீசன் தொடக்கத்தில் நல்ல தரமான பருத்தியை பஞ்சாலைகள் வாங்கும்போது பொதுவாக பருத்தி விலை உயரும். பஞ்சின் மீது 10 சதவீத இறக்குமதி வரி ஜவுளித் தொழிலில் நிலைமையை மோசமாக்கியுள்ளது. அந்த வரியை குறைக்க வேண்டியும், இந்திய பருத்தி கழகம் போதிய கையிருப்பு பஞ்சை வாங்கி நூற்பாலைகளுக்கு மட்டுமே விற்க வேண்டும் என்றும் பிரதமருக்கு சைமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

பருத்தி விலை தொடர்ந்து அதிகரிப்பதும், அதன் விளைவாக நூல் விலை ஏறுவதும், ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஆர்டர்களை நிறைவேற்றுவதில் பாதிப்பை அடையச் செய்கிறது. தொடரும் நிச்சயமற்ற சூழலால், நீண்டகால ஆர்டர்களை உறுதிசெய்ய ஏற்றுமதியாளர்கள் சிரமப்படுகின்றனர். கடந்த மூன்று மாதங்களில் பருத்தியின் விலை சுமார் ரூ.12 ஆயிரம் அளவுக்கு உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு பிறகு எதிர்பார்க்கப்படும் பெரிய அளவிலான பருத்தி வரத்து பருத்தியின் விலையை குறைக்கும். அதன்மூலம் நூலின் விலையில் மாற்றம் ஏற்படும்.

எதிர்பார்க்கப்படும் பருத்தி மற்றும் நூலின் விலை குறைப்பானது, அடுத்த 15 முதல் 20 நாட்களில் ஜவுளித்துறையினர் எந்த ஒரு அவசர கொள்முதலிலும் ஈடுபடாமல் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

எனவே, நூற்பாலைகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த டிசம்பர் முதல் மார்ச் வரை நிலவிய இதே போன்ற நிலைமையை ஜவுளித்துறையினர் ஒற்றுமையோடு இயங்கி கட்டுக்குள் வைத்தனர். எனவே, ஜவுளித்துறையில் உள்ள அனைத்து அங்கத்தினரும் தங்களது ஒத்துழைப்பை வழங்கி தற்போது நிலவிவரும் பிரச்சினையை சுமூகமாக கடக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE