வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் - அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் : சேலம் மாவட்ட வன அலுவலர் வேண்டுகோள்

தீபாவளியின்போது, வனத்தையொட்டியுள்ள கிராம மக்கள் விலங்களை பாதிக்காத வகையில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர், சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, வாழப்பாடி, கல்வராயன், தம்மம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட 9 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட சில வனச்சரகங்களில் வன விலங்குகள், பறவைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. குறிப்பாக, காட்டு மாடு, மான், மயில் உள்பட பல விலங்குகள் உள்ளன.

இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையின்போது, பட்டாசு வெடிப்பதால் வன விலங்குகளுக்கும், வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கவும் வனத்துறையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது:

தீபாவளிப் பண்டிகையின்போது, சிலர் பொழுதுபோக்குக்காக வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி செல்வது, வன விலங்குகளை வேட்டையாடுவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதை தடுக்க, அந்தந்த வனச்சரகங்களில், சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வனச்சரகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தீபாவளிப் பண்டிகையின்போது வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும் பட்டாட்சுகளை வெடிப்பதால் வன விலங்குகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, அவற்றின் இயல்பு நிலையை பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும், பட்டாசு வெடிப்பதால் வனப்பகுதிகளில் தீ பரவும் ஆபத்தும் உள்ளது.

எனவே, வனத்தையொட்டிய கிராமங்களில், காப்புக் காட்டுக்கு நடுவே அமைந்துள்ள சில வன கிராமங்கள் ஆகியவற்றில், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மக்கள் பட்டாசு வெடிப்பதை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள், விலங்குகளை வேட்டையாடுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் ஆட்சியர் அறிவுரை

கரோனா விதிகளுக்கு உட்பட்டு திறந்த வெளியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்த வெளியில் கரோனா விதிகளுக்குட்பட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை பட்டாசு வெடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளித் திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளை பட்டாசு வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குறைந்த ஒலி எழுப்பும் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் பொதுமக்கள் கூடி பசுமை பட்டாசுகளை வெடிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE