பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்காவிட்டால் போராட்டம் : மோட்டார் டிரான்ஸ்போர்ட் பெடரேசன் அறிவிப்பு

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும், என தமிழ்நாடு மோட்டார் டிரான்ஸ்போர்ட் பெடரேசன் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல. ராஜாமணி தெரிவித்தார்.

இதுகுறித்து நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் இரண்டும் அனைத்து பொதுமக்களுக்கும் மிகவும் தேவையான அத்தியாவசியப் பொருளாகும். கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.26 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.53.28 ஆகவும் இருந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அப்போது பாஜக போராட்டம் நடத்தியது.

தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. கடந்த 6 ஆண்டுகளில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.50, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.35 விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.31-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.103.25-க்கும் விற்பனையாகிறது. நாள்தோறும் விலை உயர்ந்து வருவதால் வாடகையை உயர்த்த முடியவில்லை.

இதனால், லாரி, பேருந்து, டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட மோட்டார் வாகன தொழிலில் ஈடுபடுவோர் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். பல மோட்டார் வாகன உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் தொழிலை விட்டே வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. சர்வதேச விலைக்கு நிகராக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்துள்ள மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்.

லாரி உரிமையாளர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட சில அமைப்புகள் இப்பிரச்சினையில் போதிய கவனம் செலுத்தவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என வாக்குறுதி அளித்து திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது.

அதன் பின்னர் பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது, டீசல் விலையை கண்டுகொள்ளவில்லை. தமிழக முதல்வர் இது குறித்து நடவடிக்கை எடுத்து உடனடியாக டீசல் விலையை குறைக்க வேண்டும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து, விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவராவிட்டால், விரைவில் அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்கள், தொழிற் சங்கங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து மாநில அளவில் தொடர் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE