இயற்கை வழி மலைத்தோட்ட காய்கறிகளுக்கு சந்தை வாய்ப்பு: கருத்தரங்கில் தகவல் :

By செய்திப்பிரிவு

சேலம்: இயற்கை வழி மலைத்தோட்ட காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது என ஏற்காட்டில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான இயற்கை வழி மலைத்தோட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஏற்காட்டில் நடந்தது. கருத்தரங்குக்கு, மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சத்யா தலைமை வகித்தார். கருத்தரங்கை தொடங்கி வைத்து கோவை தோட்டக்கலை கல்லூரி முதல்வர் புகழேந்தி பேசியதாவது:

மலைப்பகுதிகளில் விளையும் இலைப்பயிர்களான முட்டைகோஸ், பிரக்கோலி மற்றும் காலிஃபிளவர் உள்ளிட்டவைகளின் தேவைகள் அதிகரித்துள்ளன. இவை, குறிப்பாக பீட்சா, பர்கர், சாண்ட்விச் உள்ளிட்ட உணவுகள் தயாரிக்க அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. எனவே, தரமான இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் மலைத்தோட்டப் பயிர்களை, அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். எனவே, மலைப்பகுதி விவசாயிகள், இதுபோன்ற பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உதவி இயக்குநர் (அங்கக வேளாண்மை) கவுதமன் பேசும்போது, “இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு, அதிக விலை கிடைக்கிறது. எனவே, இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள் என்பதற்கான அங்ககச் சான்றினை விவசாயிகள் முறையாகப் பெற்று, விவசாயத்தில் ஈடுபடுவது அவசியம்” என்றார்.

கருத்தரங்கில், சேலம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்வமணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (ஏற்காடு) மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி நடந்த கண்காட்சியில், மலைத்தோட்ட பயிர்களான காலிஃபிளவர், ரெட்யூஷ், பிரக்கோலி, கேரட், பீட்ரூட், ஆர்ட்டிகோஸ், சைனீஸ் கேப்பேஜ் உள்ளிட்ட பயிர்கள், ரம்புட்டான், லிச்சி, வால்நட், பிளம் உள்ளிட்ட மலைத்தோட்ட பழங்கள் இடம் பெற்றிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்