கல் குவாரி இயங்க அனுமதியளித்த வருவாய்த்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

நாமக்கல்: கல் குவாரிகள் இயங்க அனுமதியளித்த வருவாய்த் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செங்கோடு அருகே கோக்கலை கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டக்குழு தலைவர் கே.பழனிவேல் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், கோக்கலை சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள குவாரிகளில் 150 அடி ஆழத்திற்கு மேல் கற்கள் வெடி வைத்து எடுப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட குவாரிகளை புதுப்பிக்க ஆதாரவாக கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கியதால் மீண்டும் குவாரிகள் இயங்குகின்றன. எனவே, தவறான சான்று வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. கொமதேக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டக் குழு உறுப்பினர் கணேஷ் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE