வணிகவரித் துறை நுண்ணறிவுப் பிரிவு நடத்திய வாகனத் தணிக்கை மூலம் ரூ.4.75 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வணிகவரித் துறைச் செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துவதில், வணிகவரித் துறை மூலம் பெறப்படும் வரி வருவாய் பெரும்பங்கு வகிக்கிறது. அரசுக்குச் சேரவேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வணிகவரித் துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு வாகன தணிக்கை உள்ளிட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, கடந்த அக். 4 முதல் 24-ம் தேதி வரை முடிவடைந்த காலகட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவுப் பிரிவு தலைமை அலுவலங்கள் மூலம் 38,542 வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் 46,712 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு, வழிப்பட்டியல்கள் இல்லாமல் சென்ற 902 வாகனங்கள் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டு, வரி மற்றும் அபராதமாக ரூ.4.75 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய், எவ்வித ஏய்ப்புகளும் இன்றி வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய இத்தகைய தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago