100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் - அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் : முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்றும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒரே இடத்தில் ஒன்றாக குறிப்பிட்ட நாட்களுக்கு பணியாற்றியவர்களுக்கான ஊதியம் ஒரு சில பிரிவினருக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் அளிக்கப்பட்டு விடுவதாகவும், ஒரு சில பிரிவினருக்கு கிடைக்க 2 மாதங்கள் ஆவதாகவும், அதன் காரணமாக பணியாளர்களிடையே சந்தேகமும், கசப்புணர்வும் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஒரே இடத்தில் ஒன்றாக பணியாற்றியவர்களுக்கான ஊதியத்தை ஒரே சமயத்தில் வழங்குவதுதான் இயற்கை நியதியாகும். இந்த இயற்கை நியதியை பின்பற்றி ஊதியம்வழங்கும்போது, பணியாற்றுபவர்களிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும், சகோதரத்துவமும் ஏற்படுவதுடன், பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் மேலும் சிறப்பாக பணியாற்றவும் வழிவகுக்கும்.

இந்தியாவில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு சரியாக எவ்வளவு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதை கண்டறியும் வகையில் மத்திய அரசு புதிய முறையை நடப்பாண்டு முதல் செயல்படுத்தியுள்ளதுதான் இதற்கு காரணம் என்றாலும், இதில் உள்ள சாதக பாதகங்களை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. எனவே முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து, அனைத்து பிரிவினரிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முதல்வருக்கு நன்றி...

இந்நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய தொகையை பெற்றுத் தர முயற்சி மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்