சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் 2009, 2010, 2011-ம் ஆண்டுகளில் பதிவு மூப்பு முறையில் 31,170 பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். அவர்களில் 22,351 பேர் கலந்து கொண்டனர். 8,819 பேர் கலந்து கொள்ளவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 11,161 பேர் பணியில் சேர்ந்து விட்டனர்.
2011-ல் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. 2012 ஜூன் 23-ம் தேதி அதிமுக ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, 340 பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சிக் கழகம், இனி ஆசிரியர்களை தகுதித் தேர்வுநடத்திதான் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
எனினும், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது என்று அந்த அறிவிப்பில் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும், இனி தகுதி தேர்வு நடத்திதான் ஆசிரியர்களை தேர்வு செய்வோம் என்று அதிமுக அரசு அறிவித்தது.
5,000 பேர் பாதிப்பு
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபிறகு 1,258 பட்டதாரி தமிழாசிரியர்கள் உட்பட சுமார் 5 ஆயிரம் பேர் பணி நியமனம் கிடைக்கப் பெறாமல் உள்ளனர். அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். காலி பணியிடங்கள் ஏற்படும்போது முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்ளித்தது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago