கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராபி பருவத்தில் நெல், மக்காச்சோளம், சிறுதானிய பயிர்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள், பருத்தி, கரும்பு, தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்கள் சாகுபடி பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் உரம் விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டதில், உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985-யை சரியாகப் பின்பற்றாத ஒரு சில்லரை விற்பனை நிலையத்திற்கு விற்பனைத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உரக்கட்டுப்பாடு ஆணையின்படி, ஆவணங்களை முறையாக பராமரிக்காத 3 விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்பற்றாததன் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் கூறுகையில், சில்லரை உரம் விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும்.
உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார்களை தெரிவிக்க, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago