சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நவ.23-க்கு ஒத்திவைப்பு :

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாகை அருகே நரிமணத்தில் செயல்பட்டு வரும் மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் துணை சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இத்திட்டம் குறித்து ஆட்சியர் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, உண்மை நிலையை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மேலும், விவசாயிகளின் ஒப்புதல் பெறாமல் நிலம் கையகப்படுத்துவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் 2020-21-ம் ஆண்டுக்கு சம்பா காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கி வருகிறது. ஆனால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 193 கிராமங்களுக்கு ஜீரோ சதவீதம் இழப்பு என மதிப்பிடப்பட்டு இழப்பீடு வழங்க மறுத்துள்ளது. அரசு அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நவ.9-ம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கனமழை காரணமாகவும், முழுவிவரம் வரும் வரை உரிய அவகாசம் அளிக்கும் நோக்கத்திலும் முற்றுகை போராட்டம் நவ.23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE