திருவாரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு :

திருவாரூர்: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கரோனா பரவல் வெகுவாக குறைந்ததைத் தொடர்ந்து, நடப்பாண்டு செப்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, முதல் கட்டமாக 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலானவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

அதைத்தொடர்ந்து, ஒன்றரை ஆண்டுக்குப் பின்னர் தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் மழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், திருவாரூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து, கொரடாச்சேரி ஒன்றியத்துக்குட்பட்ட மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேற்று வந்த மாணவ, மாணவிகளை ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் பாலசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE