தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் - கல்லறைத் திருநாளையொட்டி சிறப்பு வழிபாடு :

தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறையில் நேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

கல்லறைத்திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சூசையப்பர் கல்லறைத் தோட்டம், வியாகுலமாத கல்லறைத் தோட்டம், திருஇருதய ஆண்டவர் கல்லறைத் தோட்டம், மிஷின் தெருவில் உள்ள சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் நேற்று கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை மலர்களால் அலங்கரித்து, இனிப்பு, பழங்களை வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி, சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்காரஅன்னை பேராலய கல்லறைத் தோட்டம், செம்போடை கல்லறைத் தோட்டம், ஊசி மாதா தேவாலய கல்லறைத் தோட்டம், பெருமாண்டி கல்லறைத் தோட்டம், கருப்பூர் கல்லறைத் தோட்டம் ஆகிய இடங்களிலும் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதேபோல, பட்டுக்கோட்டை, பூண்டி மாதாகோவில் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாள் வழிபாடு நடத்தினர்.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்- திருச்சி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டம், ஆண்டிமடத்தை அடுத்த தென்னூர் புனித லூர்து அன்னை ஆலய கல்லறைத் தோட்டம், வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை ஆலய கல்லறைத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தங்களது மூதாதையர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து உணவு, பழங்களை வைத்து படையலிட்டு பிரார்த்தனை செய்தனர்.

இதேபோல, குலமாணிக்கம், புதுக்கோட்டை, ஏலாக்குறிச்சி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறைத் தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் நகரில் துறையூர் சாலை, ஆத்தூர் சாலைகளில் உள்ள கல்லறைத் தோட்டங்கள், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, பாடாலூர், பாளையம், குரும்பலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் தங்களது மூதாதையர்கள், இறந்துபோன உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி, மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE