தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் - வே.துரைமாணிக்கம் மறைவு : முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

By செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம்(76) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் முத்த தலைவர்களில் ஒருவருமான வே.துரைமாணிக்கம் செவ்வாய்க்கிழமை (நேற்று) மதியம் 1.15 மணிக்கு சென்னை மருத்துவமனையில் காலமானார்.

அஞ்சலிக்காக அவரது உடல், சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் துரைமாணிக்கம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இரா.முத்தரசன் வெளியிட்ட செய்தியில், ‘காவிரி பிரச்சினை போன்ற விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக பெரும் போராட்டங்களை நடத்திய துரைமாணிக்கத்தின் மறைவு விவசாயிகள் இயக்கத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். புதன்கிழமை (இன்று) மாலை 4 மணிக்கு தஞ்சை மாவட்டம் பாப்பாநாட்டில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் நடக்கும். துரைமாணிக்கம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முறையில் தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிட்டப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்