கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா அக்.21-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவு அம்பாள் பல்வேறு வாகனங்களில் வெளிப்பிரகாரத்தில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி, கோயில் நடைஅதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது.
பின்னர், செண்பகவல்லி அம்பாள் மூலவர் மற்றும் உற்சவர்அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும்தீபாராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.மாலை 6 மணிக்கு அம்பாள் வெளிப்பிரகாரத்தில் திருவீதியுலாவும், தொடர்ந்து தெப்பத்தில் மஞ்சள் தீர்த்த நீராடுதலும் நடந்தது. 6.45 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர்.
நீலாதேவி, தேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கு அலங்காரத்தில் பூவனநாத சுவாமி, செண்பகவல்லி அம்பாள்திருக்கல்யாணத்துக்கு அழைத்து வரப்பட்டார். சுந்தரராஜ பெருமாள், ராஜகோபால சுவாமி கோயில்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் திருமண சீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, 8 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் சுவாமி முன்னிலையில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் வெளிப்பிரகாரத்தில் பட்டணப்பிரவேசம் சென்றனர்.
விழாவில், கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏவின் மனைவி இந்திரா காந்தி, மண்டகப்படிதாரரான ஆயிரவைசிய காசுக்கார செட்டியார்சங்கத் தலைவர் வெங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் ராஜகோபால், கோயில் நிர்வாக அலுவலர் நாகராஜன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல, கோவில்பட்டி வீரவாஞ்சி சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நடந்தது. பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் நடத்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு சப்பரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 30-ம் தேதி ஐப்பசி தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஐப்பசி திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்றுமுன்தினம் காலை 7.15 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து மாலையில் பாகம்பிரியாள் அம்பாளுக்கு சுவாமி காட்சி தருதல் மற்றும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவில் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago