தூத்துக்குடியில் மழை குறைந்தது - தெருக்களில் தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம் :

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்தது. மழையால் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேநேரத்தில் தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. நேற்று பகலில் மழை இல்லை.

தூத்துக்குடி மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீர் அதிகமாக தேங்கும் 25 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளில் பம்பிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சம்ப்கள் மூலம் மழை நீரை தேக்கி, 40 முதல் 50 குதிரை திறன் கொண்ட ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு, வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த மோட்டார்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், தண்ணீர் குறைந்ததும் தானாக நின்றுவிடும். தண்ணீர் அளவு அதிகரித்தால் தானாக இயங்கும்.

பாதாள சாக்கடை திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 துணை பம்பிங் நிலையங்கள் மூலமும் மழைநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த பணிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக கண்காணித்து வருகிறார்.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 23, காயல்பட்டினம் 32, குலசேகரன்பட்டினம் 9, விளாத்திகுளம் 41,காடல்குடி 23, வைப்பார் 37, சூரன்குடி 33, கோவில்பட்டி 30, கழுகுமலை 7, கயத்தாறு 30, கடம்பூர் 31, ஓட்டப்பிடாரம் 19, மணியாச்சி 40, வேடநத்தம் 30, கீழ அரசடி 3, எட்டயபுரம் 51.8, வைகுண்டம் 12, தூத்துக்குடியில் 2.4 மி.மீ. மழைபெய்துள்ளது. மழையால் கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 8 வீடுகள் பகுதியளவும், 2 வீடுகள் முழுமையாகவும் என, 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE