முதியோர் நல வாரியம் அமைக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: எம்பவர் இந்தியா நுகர்வோர், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 75 லட்சம் முதியோர் உள்ளனர். 2030-ம் ஆண்டில் முதியோர்களின் எண்ணிக்கை 1.5 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, முதியோர்களின் நலம் பேண முதியோர் நல வாரியம் அமைக்க வேண்டும். முதியோர்களின் மேம்பாட்டுக்காக பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் முதல்வர் விருது, ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

முதியோருக்கு சிகிச்சை அளிக்க தாலுகா அளவில் தொடர் சிகிச்சை மையங்களை தமிழக அரசு தொடங்க வேண்டும். முதியோர் உதவித் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி, வீட்டுக்கே சென்று அளிக்க வேண்டும். முதியோர் இல்லங்களின் தரத்தை நிர்ணயிக்க குழு நியமிக்க வேண்டும். கிராமப்புறங்களிலும் முதியோர் இல்லங்களை அரசு தொடங்க வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 60 வயதைக் கடந்த அனைத்து முதியோர்களுக்கும் நிமோனியா தடுப்பூசி போட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE