திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் - அன்னதான திட்ட பணியாளர் நியமனத்தில் திமுக தலையீட்டை கண்டித்து பாஜக போராட்டம் :

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் முழு நேர அன்னதான திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஏற்கெனவே இருக்கும் சமையல் மாஸ்டர், உதவியாளர்கள், தனியார்காவலாளிகள் மூலம் தற்போது அன்னதான உணவு பரிமாறப்பட்டு வருகிறது. முழு நேர அன்னதான திட்டத்துக்கு கூடுதலாக சமையல் மாஸ்டர், உதவி சமையல் மாஸ்டர், மேற்பார்வையாளர், சப்ளையர் உள்ளிட்ட 60 பணியிடங்களுக்கு, தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆனால், இப்பணி நியமனம்தொடர்பாக கோயில் நிர்வாகம்சார்பில் முறையான எந்தவிதஅறிவிப்பும் வெளியிடப்படவில்லை. திமுகவைச் சேர்ந்தநிர்வாகிகள் தலையிட்டு,தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை, பணம் வாங்கிக் கொண்டு இந்த பணிக்கு நியமனம் செய்வதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். முறையாக அறிவிப்பு செய்து அரசு விதிகள்படி பணி நியமனம் செய்ய வலியுறுத்தி பாஜக மகளிரணி பொதுச் செயலாளர் நெல்லையம்மாள் தலைமையில், அக்கட்சியினர் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை நேற்று முன்தினம் மாலையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாஜகமாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், இந்து முன்னணிமாநில துணைத் தலைவர் ஜெயகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் வினோத், திருச்செந்தூர் நகர இளைஞரணி தலைவர் முத்துவேல், ஒன்றிய தலைவர் பிரசாந்த் கலந்து கொண்டனர்.

இணை ஆணையர் குமரதுரை அந்த வழியாக வந்தபோது, அவரை பாஜகவினர் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

“அன்னதான திட்டத்துக்கான பணியாளர் நியமனம் குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன் பிறகே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என, இணை ஆணையர் உறுதியளித்தார். அதன்பின், பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE