ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு (UYEGP) திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழிற் கடன்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, 18 வயது முதல் 35 வயதுள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தினர்களுக்கு வயது உச்ச வரம்பு 45-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் அவசியம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசித்தவராக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ.15 லட்சம், சேவை மற்றும் வியாபார தொழில்களுக்கு ரூ.5 லட்சம் கடன் உதவி வழங்கப்படும். இதற்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் ஜவுளி வியாபாரம், பலசரக்கு மற்றும் அனைத்து வியாபரம் சார்ந்த தொழில்கள், டெய்லரிங், செல்போன் சர்வீஸ், ஜெராக்ஸ், ப்யூட்டி பார்லர், பயணிகள் ஆட்டோ, பேக்கரி மற்றும் மிட்டாய் தயாரிப்பு, கயிறு தயாரித்தல், கடலை மிட்டாய் தயாரிப்பு, தேநீர் கடை, டிபன் கடை வைத்தல், அரிசி விற்பனை, ஆண்கள் உடற்பயிற்சி நிலையம், டைல்ஸ் கடை, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரித்தல், ஸ்டீல் கட்டில் பீரோ மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கலாம்.
எனவே, நடப்பு நிதியாண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் கிராமப்புறபகுதிகளில் இத்திட்டத் தின் கீழ் பயனாளிகள் பயன்பெறதகுதியுள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் எண்:5, தேவராஜ் நகர், ராணிப்பேட்டை என்ற முகவரியில் இயங்கி வரும் பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.’’ என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago