அனைத்து ஊராட்சிகளிலும் - காவிரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : ஒன்றியகுழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி களிலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒன்றியகுழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

ஜோலார்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் முதல் ஒன்றி யக்குழுக்கூட்டம் நடை பெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர்சத்யா தலைமை வகித்தார். துணைத்தலைவர் தேவி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், சங்கர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, ஜோலார் பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள், புதிய திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்டு பேசிய ஒன்றிய கவுன்சிலர்கள், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மையப்பன் நகர் மற்றும் கட்டேரி ஊராட்சிப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.

எனவே, அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவாக செயல் படுத்தி பொது மக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும்.

பல்வேறு ஊராட்சிகளில் கிராமச்சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. மழைக் காலம் என்பதால் அந்த சாலை வழியாக பொதுமக்கள் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பொது நிதி ஒதுக்கி அனைத்து சாலைகளையும் புனரமைக்க வேண்டும். மிகவும் மோசமான சாலைகளில் உடனடியாக பேட்ச் ஒர்க் செய்ய வேண்டும்.

அம்மையப்பன் நகர் ஊராட்சியில் பால்காரன் வட்டத்தில் நடமாடும் ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக ரேஷன் பொருட்கள் விநியோகம் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் நடமாடும் ரேஷன் கடையை அங்கு செயல்படுத்த வேண்டும்.

அம்மையப்பன் நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 150 குடும்பங்கள் நீண்ட கால மாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 200-க்கும் மேற்பட்டோர் வீடு இல்லாமல் இருப்பதால் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE