திருப்பத்தூர் நகராட்சியில் - பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு :

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் கழிவுநீர் சாலை களில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பத்தூர் நகராட்சியில் ரூ.106 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, பல வார்டுகளில் தோண்டப்பட்ட சாலைகள் சரிவர மூடப்படவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, "திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு பூங்காவனத்தமன் தெருவில் பாதாள சாக்கடை வழியாக கழிவுநீர் செல்கிறது.

இத்தெருவில் அமைக்கப்பட்டுள்ள ‘மேன் ஹோல்’ சரியாக மூடப்படா ததால் கழிவுநீர் வெளியேறி சாலையில் குட்டைப்போல் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கழிவுநீருடன், மழைநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இத்தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இத்தெருவில் உள்ளன. தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதேபோல, பல வார்டுகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடுகிறது. சாலை முழுவதும் குப்பைக்கழிவுகள் தேங்கியுள்ளன.

தற்போது பண்டிகை காலம் என்பதாலும், பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கழிவுநீர் தேங்கிய சாலை வழியாக சென்று வர முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், பலவிதமான நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘பாதாள சாக்கடை திட்டப் பராமரிப்புப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற் கொண்டு வருகிறது. 5 ஆண்டு களுக்கு அவர்கள் தான் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருப்பத்தூர் நகராட்சியில் சில இடங்களில் கழிவுநீர் வெளியேறி வருவது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவற்றை சரி செய்வதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நகராட்சி நிர்வாகமும் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE