கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, மேளதாளங்கள் முழங்க ஆசிரியர்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, 19 மாதங்கள் கழித்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நுழைவுவாயிலில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வகுப்பறைகள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமரக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது.
முதல்நாளில் பல மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்திருந்தனர். பல பள்ளிகளில் மேளதாளங்கள் முழங்க, இனிப்புகள் வழங்கி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சில பள்ளிகளில் பூங்கொத்து அளித்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பி.வி.பி நினைவு மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் இனிப்புகளை வழங்கி கலந்துரையாடினர்.
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “முதல்நாளில் சராசரியாக 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் வருகை புரிந்தனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள வகுப்புகளில் சுழற்சி அடிப்படையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரம் முழுவதும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் சார்ந்த வகுப்புகள் நடைபெறாது. ஒன்றரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், கதை சொல்லல், இசை, நடனம் போன்று உற்சாகமூட்டும் செயல்பாடுகளில் ஈடுபட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்புக்கு காலதாமதம் ஆனதால் கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. வரும் வாரங்களில் வகுப்புகள் தொடங்கியபிறகு, அறிவியல், கணித பாடங்களின் அடிப்படைகளை மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்ட பயிற்சி அளிக்கப்படும்” என்றனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியர்கள் இனிப்புகள், கடலை மிட்டாய் மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், பேண்டு வாத்தியம் முழங்கவும் மாணவிகள் வரவேற்கப்பட்டு, வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளுக்கு பென்சில், பலூன்கள் போன்றவை பரிசளிக்கப்பட்டன.
திருப்பூர் பெரிச்சிபாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவிலைத் தோரணம் மற்றும் வாழை மரங்கள் கட்டப்பட்டு, பூ, பழம் கொடுத்து திருவிழா போல மாணவர்களை வரவேற்றனர். வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 900-ஐ நெருங்கியுள்ளதால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆசிரியர்கள் மிக்கி மவுஸ் மற்றும் கோமாளி வேடமிட்டு மாணவர்களை குதூகலப்படுத்தினர். தாராபுரம் அருகே உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதால், பள்ளி திறக்கப்படவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் 700 பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே, வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி
ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெத்தநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு நேற்று திடீரென சென்ற தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாணவ - மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘பெத்தநாயக்கனூர் தொடக்கப் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்தும், இனிப்பும் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. 148 மாணவர்கள் வரவேண்டிய இடத்தில் 78 மாணவர்கள் வந்திருந்தனர். அது குறித்து ஆசிரியர்களிடம் கேட்கப்பட்டது. தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப 2 ஷிப்ட்களாக வகுப்புகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர். 15 நாட்களுக்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல், மகிழ்ச்சிகரமான ஒரு வகுப்பறையை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
உடுமலை
திருமூர்த்தி மலையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு 5 மாணவ, மாணவிகள் மட்டுமே வந்திருந்தனர். இப்பள்ளிக்கு திடீரென சென்ற அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களுக்கு மலர் கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.பின்னர் திருமூர்த்திநகர் ஆசிரியர் பயிற்சி நிலையம், புங்கமுத்தூரில் உள்ள அரசு உதவி பெறும்மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago