தீபாவளி பண்டிகையை முன்னிட்டு - சேலத்தில் பாதுகாப்பு பணியில் 850 போலீஸார் : வாகன நெரிசலை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகரம் முழுவதும் 850 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் 4-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தீபாவளி பண்டிகைக்கு ஆடை, ஆபரணங்கள், இனிப்பு, பட்டாசு வாங்க சேலம் மாநகர பகுதிக்கு மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் பல லட்சம் பேர் வந்து செல்கின்றனர்

இதனால், ஜவுளி உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவின்பேரில், சேலத்தில் 850 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மாநகர பகுதியில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பெருத்தப்பட்டும், உயர் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில், போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நகரப் பேருந்தும், ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்கள் இருசக்கரவாகனம் மற்றும் கார் உள்ளிட்டவைகளை பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இதனால், முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே, நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக அம்மாப்பேட்டையில் இருந்து சின்னக்கடை வீதி, பஜார் தெரு வழியாக சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு இயக்கப்படும் பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்களை மாற்றுப்பாதையில் இயக்க போக்குவரத்து பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்