பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் அகற்றப்பட்டு மதுரையில் உள்ள வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குரு பூஜை விழா அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் நடந்தது. இதை முன்னிட்டு அக்.25-ம் தேதி அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக வழங்கப்பட்ட 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு, சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
குரு பூஜை விழா முடிவடைந்ததால், தேவர் நினைவிடப் பொறுப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தேவர் சிலைக்கு பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை செய்து தங்கக் கவசத்தை அகற்றினர். பின்னர் தங்கக் கவசம் கமுதி தனி ஆயுதப்படை ஆய்வாளர் மோகன் தலைமையில், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் மதுரைக்கு கொண்டு சென்று வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago