நாமக்கல் மாவட்ட ஆட்சியரை கைது செய்ய பிடிவாரண்ட் : பரமத்தி சார்பு நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால் நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

பரமத்திவேலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயிஆர்.ராசப்பன். இவரது நிலத்தின் பட்டாவில் கோயில் சுவாமிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக ராசப்பன் பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ராசப்பன் நிலப் பட்டாவில் உள்ள சுவாமிகளின் பெயர்களை நீக்கி தனிப் பட்டாவாக வழங்க பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியர், பரமத்திவேலூர் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், நீண்ட காலமாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து விவசாயி ராசப்பன் மீண்டும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும்படி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பான விசாரணையில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்