தமிழ்நாடு நாள் அறிவிப்பில் வரலாற்றை திரிக்கும் முயற்சி : சேலத்தில் சீமான் குற்றச்சாட்டு

தமிழ்நாடு நாள் அறிவிப்பில் வரலாற்றை திரிக்கும் முயற்சியில் திராவிட கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள்- தமிழகப் பெருவிழா சேலம் அம்மாப்பேட்டையில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு நாளாக நவம்பர் 1-ம் தேதியை நாங்கள் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு சேலத்தில் கொண்டாடுகிறோம். 1967-ம் ஆண்டு தமிழ்நாடு மாநிலமாக பிரிக்கப்பட்ட நாள் நவம்பர் 1. தமிழ்நாடு என பெயர் அறிவிக்கப்பட்ட நாள் ஜூலை 18. தமிழக அரசு ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்துள்ளது.

குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு உள்ளது. வரலாற்றை திரிக்கும் முயற்சியில் திராவிட கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு உள் ஒதுக்கீடு ரத்து என நீதிமன்றம் கூறியிருப்பது எங்களை பொறுத்தவரை பெரிய ஏமாற்றம். மொழி மற்றும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதி எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE