சேலம் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்புக் குழு கூட்டத்தில் எம்பி பார்த்திபன் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கண்காணிப்புக் குழு தலைவர் எம்பி பார்த்திபன் தலைமை வகித்தார். ஆட்சியர் கார்மேகம் முன்னிலை வகித்து பேசியதாவது:
மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக ஆய்வு செய்தல் உள்ளிட்டநோக்கங்களைக் கொண்டு கண்காணிப்புக் குழு செயல்படுகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டப்பணிகளில் உள்ள குறைகள் மற்றும் நிறைகளை ஆய்வு செய்து வேகமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், குழு தலைவர் எம்பி பார்த்திபன் பேசியதாவது:
தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தினை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதிகளின் மூலம் 35 திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்கள் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்படும் திட்டங்களை, துறை அலுவலர்கள் முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும், திட்டங்களை செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் இருந்தால் அதனை தெரியப்படுத்தினால், துறை செயலர்களிடம் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், குழு துணைத் தலைவர்கள் எம்பி-க்கள் கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), செந்தில்குமார் (தருமபுரி), சின்ராஜ் (நாமக்கல்), குழு உறுப்பினர்கள் எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ரேவதி ராஜசேகரன், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹ்மான், உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago