பிளஸ் 1 மாணவர் தற்கொலை கண்டித்து சாலை மறியல் :

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் காமராஜ் நகரைச் சேர்ந்த லோகநாதனின் 2-வது மகன் விஷால்(16). திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் தலைமுடியை ஒழுங்காக வெட்டவில்லை எனக் கூறி தலைமையாசிரியர் விஷாலை கண்டித்து, பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். பின்னர், விஷால் தனது தாயை அழைத்து வந்தபோதும் விஷாலை தலைமையாசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஷால் அக்.25-ம் தேதி விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அதுகுறித்து செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதைப் பார்த்த நண்பர்கள், உறவினர்கள், விஷாலை திருநாகேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி விஷால் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

இதையடுத்து, தலைமையாசிரியரை கண்டித்து, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் பள்ளி அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் சின்னை.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜீவபாரதி, பக்கிரிசாமி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன், மாணவர் சங்க நிர்வாகிகள் அருண்ராஜ், தமிழ், சந்தோஷ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது, விஷால் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதற்கிடையே திருநீலக்குடி போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE