நெல்லை மாவட்டத்தில் இடைவிடாத மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : பள்ளிகளுக்கு விடுமுறை, தாமிரபரணியில் குளிக்க தடை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு 3-வது நாளாக விடுப்புஅளிக்கப்பட்டிருந்தது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரள்வதால் ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்றும் மழை நீடித்தது. நேற்றுகாலை நிலவரப்படி அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 11, சேர்வலாறு- 7,மணிமுத்தாறு- 6.6, நம்பியாறு- 28, கொடுமுடியாறு- 5, அம்பாசமுத்திரம்- 17.4, சேரன்மகாதேவி- 21, ராதாபுரம்- 52, மூலக்கரைப்பட்டி- 15, நாங்குநேரி- 14.5 , திருநெல்வேலி- 11.2, பாளையங்கோட்டை- 10.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 135.45 அடியாக இருந்தது. அணைக்கு1,308 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து 1,404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் பெய்த மழையால், களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அங்கு செல்ல நேற்று தடைவிதிக்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. தீபாவளி நெருங்கியிருக்கும் நிலையில் சாலையோர வியாபாரிகளின் வியாபாரம் பெருமளவுக்குபாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 1 முதல் 8-ம் வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர்கள் செல்லவில்லை.

மழை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு கூறியதாவது:

மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மட்டும் 18 மி.மீ. மழைபதிவாகியிருந்தது. பாபநாசம் அணையில் 92 சதவீதம் தண்ணீர்நிரம்பியிருக்கிறது. மாவட்டத்திலுள்ள 6 அணைகளும் பாதுகாப்பாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குறைந்த அளவுக்கே மழை இருக்கிறது. பொதுமக்கள் மழை குறித்து அச்சப்படத் தேவையில்லை. தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வருகிறது. எனவே, அங்கு குளிக்க வேண்டாம்என்று மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகரில் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எம்கேபி நகரில் மழைநீர் வழிந்தோட கால்வாயை தூர்வாரியதால் இந்த ஆண்டு அங்கு மழை நீர் தேங்கவில்லை. மாவட்டத்தில் வெள்ளம்வந்தால் தண்ணீர் தேங்கும்65 இடங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 147 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்தார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடியில் 38 மி.மீ. மழை பதிவானது.தென்காசியில் 24, சங்கரன்கோவிலில் 17, அடவிநயினார் அணையில் 15, குண்டாறு அணையில் 7, கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 5, கருப்பாநதி அணை, செங்கோட்டையில் தலா4, சிவகிரியில் 3 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால், இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர்மட்டம் 75.75 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 129 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்