திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அப்பநல்லூர் ஊராட்சி அம்மா பாளையம் கிராம மக்கள், ஆட்சியர் பா.முரு கேஷை சந்தித்து நேற்று மனு அளித்தனர். அதில், “எங்கள் கிராமத்தில் 1,100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். எங்களது அன்றாட வாழ்வாதாரத்துக்காக கண்ண மங்கலம் – அம்மாபாளையம் இடையே உள்ள பிரதான சாலையை பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில், அந்த சாலையில் கடக்கும் ரயில்வே தண்டவாளத்தின் கீழ் பகுதியில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.
சுரங்கபாதைக்கு அருகே 150 மீட்டர் தொலைவில் பெரிய கல்லேரி மற்றும் விவசாய கிணறுகள் அதிகம் இருந்தது. இதனை சுட்டிக்காட்டி, சுரங்க பாதை அமைத்தால், அதில் அதிகளவில் தண்ணீர் சுரக்கும் என கட்டுமான பணியை தொடங்க திட்டமிட்டபோதே எச்சரித்தோம். ஆனால், எங்களது எச்சரிக்கையை மீறி 26 அடி ஆழம், 30 அடி அகலத்துக்கு சுரங்கபாதை அமைக்கப்பட்டது. இதனால், இன்று வரை அவதிப்படுகிறோம்.
மழைக் காலங்களில் சுரங்க பாதையில் 6 அடி முதல் 8 அடியில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், சுரங்கபாதையை கடந்து செல்ல முடியவில்லை. கிராம மக்களே, தங்களது சொந்த நிதியை கொண்டு மோட்டார் மூலமாக, சுரங்க பாதையில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். பொருளா தார நெருக்கடியால், இப் பணியை தொடர்ந்து செய்யும் முடியவில்லை. மின்விளக்கு வசதியும் கிடையாது. இரவு நேரத்தில் அச்சத்துடன் பயணிக்க வேண்டும். கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் பலனில்லை. ஊராட்சி மன்றம் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க யாரும் முன்வரவில்லை.
சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால், எங்கள் கிராம மக்கள் வெளியூர் செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்களின் இன்னல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல்நிலை பாதித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. விவசாய இடு பொருட்கள் மற்றும் விளை பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் தவிக்கிறோம். தண்ணீரில் இரு சக்கர வாகனங்களை இயக்கும் பழுதடைந்துவிடுகிறது. இதனால், ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலைக்கு, நாங்கள் தள்ளப்பட் டுள்ளோம். சுரங்கபாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண மாவட்ட ஆட்சியர் முன்வர வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago