இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்து - பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் :

வன்னிய சமூகத்துக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும், எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிக்கை வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நிலுவையில் இருந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.

இதனை கண்டித்து, திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக முன்பாக பாமகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கிருபாகரன் தலைமை வகித்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். இதில், முன்னாள் எம்எல்ஏ டி.கே.ராஜா, மாநில துணைத்தலைவர் பொன்னுசாமி, மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தி.மலை, செங்கம், ஆரணி, செய்யாறு மற்றும் வந்தவாசி உட்பட மாவட்டத்தில் பல இடங் களில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.

வேலூர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாமக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாமக மாநில துணை பொதுச் செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமை தாங்கினார். இதில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் என்.டி.சண்முகம், மாநில வன்னியர் சங்க செயலாளர் எம்.கே.முரளி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE