ரசாயன உரப் பயன்பாட்டை குறைக்கும் வழிமுறைகள் குறித்து, விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராபி பருவத்துக்கு தேவையான சோளம், உளுந்து, பச்சை பயறு விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான ரசாயன உரங்கள் யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் தழைச்சத்து குறைந்த நிலையிலும், மணிச்சத்து மத்தியமான அளவிலும், சாம்பல் சத்து போதுமான அளவில் மண்ணில் உள்ளது. தழை, மணி, சாம்பல் சத்துகள் மண்ணில் போதியளவில் கிடைக்கப் பெற, விவசாயிகள் உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டிரியா, கேஎம்பி பொட்டாஷ் போன்ற உயிர் உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். உயிர் உரங்கள், திட உயிர் உரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்களில் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்த உயிர் உரங்களை நன்கு மக்கிய தூள் செய்த குப்பை எருவுடன் கலந்து இடுவதால், பயிருக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் சத்துகள் எளிதில் கிடைக்கும். கோவை மாவட்டத்தில் போதுமான அளவு பாஸ்பரஸ், பொட்டாஷ் சத்துகள் விவசாய நிலங்களில் இருப்பதால், விவசாயிகள் ஏக்கருக்கு ஒரு மூட்டை என்ற அளவில் டிஏபி உரம் இடுவதை தவிர்த்து அரை மூட்டை என்ற அளவில் இட்டால் போதுமானது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை உரச்செலவு மிச்சமாகும். மேலும், யூரியா உரத் தேவையை குறைப்பதற்காக மூட்டையில் உள்ள குருணை யூரியா உரத்துக்குப் பதிலாக, தற்பொழுது புதியதாக நானோ தொழில்நுட்பத்துடன் திரவ வடிவில் உரக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் நானோ யூரியாவை ஒரு லிட்டர் நீருக்கு 2 முதல் 4 மி.லி என்ற அளவில் கலந்து பயிர்கள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
முதல் தெளிப்பாக விதைப்புக்கு பிறகு, 30 முதல் 35 நாட்களில் ஒருமுறையும், இரண்டாவது தெளிப்பாக பூப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவோ அல்லது முதல் தெளிப்பில் இருந்து 20 முதல் 25 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். நெல், மக்காச்சோளம், கரும்பு, பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்களில் காய்கறிகள் மற்றும் மலர்கள் ஆகிய பயிர்களுக்கு இலை வழியாக தெளித்து பயன்பெறலாம். மேலும், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க இயற்கை உரங்களான உயிர் உரங்கள், மண்புழு உரம், தொழுஉரம், பசுந்தாள் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் பெளதிக மற்றும் வேதியியல் பண்புகளை அதிகரிப்பதுடன் மண் வளத்தை பாதுகாத்து பயிர் மகசூலை அதிகரிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago