தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 10-ம் தேதி வாகனத்தை நிறுத்தி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடியு மாநிலத் தலைவர் தெரிவித்தார்.
இந்திய தொழிற்சங்க அமைப்பான, சிஐடியு அமைப்பின் மூன்று நாள் மாநில நிர்வாகக் குழு கூட்டம், கடந்த 28-ம் தேதி முதல் கோவையில் நடந்தது. இக்கூட்டத்தில், சிஐடியு-வின் மாநிலத் தலைவர் அ.சவுந்திரராஜன், அகில இந்திய தலைவர்கள் ஹேமலதா, ஏ.கே.பத்மநாபன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். இக்கூட்டம் நேற்று நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பல நிறுவனங்களில் போனஸ் கொடுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இதனை சிஐடியு கண்டிக்கிறது. அரசு இதில் தலையிட வேண்டும். பஞ்சாலைகளில் நிரந்தர தொழிலாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 20 வருடங்களாக ஊதிய உயர்வே இல்லை. பஞ்சாலைகளில் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான குழுவை உடனடியாக அமைத்து குறைந்தபட்ச கூலி உயர்வு அளித்திட வேண்டும்.
மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைகளை திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி உள்ளாட்சி அமைப்பு மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பணியிடங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். . மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் சிஐடியு அனைத்து மாவட்டங்களிலும் சைக்கிள் யாத்திரை, மாட்டு வண்டி பேரணி உள்ளிட்ட வடிவங்களில் தொடர்ந்து நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 10-ம் தேதி பத்து நிமிடம் வாகனத்தை நிறுத்தி போராட்டம் நடத்தப்படவுள்ளது. அன்று மதியம் 12 மணி முதல் 12.10 மணி வரை பத்து நிமிடங்கள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநில தலைவர் ஜி.சுகுமாரன், மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago