பக்கவாத அறிகுறிகள் தென்பட்ட - நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனையை அணுக வேண்டும் : அரசு மருத்துவமனை டீன் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

பக்கவாத அறிகுறிகள் தென்பட்ட நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனையை அணுகினால் உரிய சிகிச்சை பெற்று குணமடையலாம் என கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்தார்.

உலக பக்கவாத தினத்தை யொட்டி கோவை அரசு மருத்துவமனை நரம்பியல் பிரிவு சார்பில் பக்கவாத விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனை மருத்துவமனையின் டீன் நிர்மலா தொடங்கிவைத்தார். பக்கவாதம், அதற்கான சிகிச்சைகள் குறித்து டீன் நிர்மலா கூறியதாவது:

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு அல்லது ரத்தக்கசிவு ஏற்படுவதால் பக்கவாதம் உண்டாகிறது. இதற்கு முக்கிய காரணியாக உயர் ரத்தஅழுத்தம் உள்ளது. மேலும், சர்க்கரை நோய், புகை பிடித்தல், அதிக கொழுப்பு, இதய நோய்கள் ஆகியவையும் காரணிகளாக உள்ளன. ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டவுடன் மூளையில் லட்சக்கணக்காண செல்கள் அழிய நேரிடுகிறது. ஒரு பக்கம் கை, கால் செயல் இழப்பு, முகம் கோணலாக தெரிவது, திடீரென நடப்பதில் தடுமாற்றம், திடீரென ஒரு கண் அல்லது இரு கண்களிலும் பார்வை இழப்பு, பேச்சு குளறுதல் ஆகியவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள். பக்கவாதம் ஏற்பட்டால் முதல் நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனையை அடைந்தால் ‘இன்ட்ராவாஸ்குலர் த்ரோம்போலிசிஸ்' என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பக்கவாதத்தை கண்டறிய சி.டி.ஸ்கேன், பக்கவாதத்துக்கான மருந்துகள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்கின்றன. பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்க நரம்பியல் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு, கதிரியக்கப் பிரிவுகள் அடங்கிய மருத்துவக் குழு உள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் 80 நோயாளிகளுக்கு ‘இன்ட்ராவாஸ்குலர் த்ரோம்போலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் பூரண குணமடைந்துள்ளனர். இந்த சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஒரு ஊசியின் விலை ரூ.50 ஆயிரம் ஆகும். எனவே, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. விரைவாக மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மட்டுமே இந்த ஊசியால் பயன் கிடைக்கும். எனவே, பக்கவாத அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவமனையை அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நரம்பியல் பிரிவு தலைவர் டாக்டர் ஷோபனா, டாக்டர்கள் செல்வகுமார், சதீஷ்குமார், ஜோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்