ஈரோட்டில் 285 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி : மாவட்ட தீயணைப்பு அலுவலர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க வந்த விண்ணப்பங்களில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து 285 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் பட்டாசு கடைகள் அமைக்க குறைந்தளவே விண்ணப்பங்கள் வந்தன. கடந்த ஆண்டு 110 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. நடப்பாண்டு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க வந்த விண்ணப்பங்களில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து 285 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 3 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பட்டாசு கடைகளில் மணல் நிரப்பிய வாளி, 300 லிட்டர் தண்ணீர் நிரப்பிய டிரம், புகைபிடிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை பலகை ஆகியவை வைத்திருக்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்க வேண்டும். பாதுகாப்பான தீபாவளி பண்டிகையை கொண்டாட தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

பள்ளிகளுக்குச் சென்று மாணவர்கள் பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பட்டாசு எப்படி வெடிக்க வேண்டும், எந்த இடத்தில் வைத்து வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான ஆடைகளை அணிந்து வெடிக்கக் கூடாது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கியுள்ளோம். இதுவரை 100 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளோம், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE