தமிழகத்தில் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள், அலுவலகக் கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில், உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 2016-ல் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.
இதன்படி, மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான பேருந்துகளை கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி, வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தமிழகத்தில் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக ரூ.694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பிரத்யேக பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இது தொடர்பாக விரிவான பட்டியலுடன் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 2-வது வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago