சென்னை மாதவரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். கோயில்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாதவரம் கைலாசநாதர், கரிவரதராஜப் பெருமாள் கோயில்களில் பக்தர்கள், இறையன்பர்களுக்கு வசதியாக என்னஅடிப்படை தேவைகளை நிறைவேற்றலாம் என்பது பற்றி ஆலோசித்தோம்.
சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது வெளியிட்ட அறிவிப்பின்படி, கைலாசநாதர் கோயிலுக்கு ரூ.2 கோடியில்குளம் கட்டுவதற்கு வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தில் சில மாற்றங்கள் செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இப்பணிகள் தை மாதத்துக்குள் தொடங்கும். கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்.
கரிவரதராஜப் பெருமாள் கோயிலுக்கு புதிய குளம் கட்ட இடம் தேர்வு செய்துள்ளோம். புதிய கோசாலை கட்டவும், கோயில் கோபுரத்தை மறைக்கும் மேற்கூரையை அகற்றவும், கோயிலை சுற்றி சுத்தம் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலைகளை பாதுகாக்க 3,087 கோயில்களில் ரூ.308 கோடியில் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 25-க்கும் மேற்பட்ட கோயில்களின் குளங்கள் ரூ.15 கோடியில் சீரமைக்கப்படும்.
கரோனா பரவல் குறைவதால், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தமிழக கோயில்களில் உள்ள 65 தங்க தேர்களில் 63 தேர்களும், 49 வெள்ளி தேர்களில் 45 தேர்களும் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், எஸ்.சுதர்சனன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago