சென்னை மாநகராட்சி 131-வது வார்டுக்கு 2005 ஏப்ரல் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
அப்போது, கே.கே.நகரில் உள்ள வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, தேர்தல் அலுவலரிடம் இருந்து முத்திரையைப் பறித்துச் சென்றதாகவும், அதை தட்டிக்கேட்ட தன்னை துரத்தி, தனது காரை சேதப்படுத்தி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் அதிமுகவைச் சேர்ந்த சந்தோஷ் கே.கே.நகர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில், தற்போது அமைச் சர்களாக உள்ள மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோருக்கு எதிராக, பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "அரசியல் முன்விரோதம் காரணமாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீஸார் முறையாக புலன் விசாரணை செய்யவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், இந்த விசாரணையை எதிர்மனுதாரர்கள் தாமதப்படுத்தியதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "புகார் அளித்தவரின் காருக்கு தீவைக்கப்பட்டதாக, சேத மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட வில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை" என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago